இன்று லிபியா விடயத்தில் காட்டிய அவசரத்தினை அன்று தமிழர் விடயத்தில் ஐக்கிய நாடுகள் வெளிக்காட்டவில்லை என ஐநா மனிதஉரிமைகள் கவுன்சிலின்கூட்டத்தொடரில் பங்கேற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா குற்றஞ்சாட்டினார்.
ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலின் 16வது கூட்டத் தொடரில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சக பிரதிநிதி சுகிந்தன் முருகையா, இளையோர் முன்னணி பொறுப்பாளர் ஜனர்தனன் புலேந்திரன்(சந்தோஸ்), இனப்படுகொலை-போர் குற்றங்களுக்கு எதிரான அமைச்சகத்தின் ஐநா மனித உரிமை சபைக்கான விவகாரங்களுக்கான பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா ஆகியோர் பங்கெடுத்துள்ளனர்.
22 மார்ச் 2011 - செவ்வாய்கிழமை இடம்பெற்ற பொதுநிலவரங்களுக்கான பிரிவில், தமிழர் பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா ஆற்றிய உரையில், ஆயதப்போர்கள் இடம்பெறும் சுழல்களில், பெரும் இனப்படுகொலைகள் இடம்பெறும் வாய்ப்புக்கள் உள்ளது பற்றி, சர்வதேச சமூகம் விழிப்புடன் இருத்தல் வேண்டும் எனப் பல ஆண்டுகளுக்கு முன்பே, முன்னாள் ஐநா பொதுச்செயலாளர் கொபி அனன் ஆலோசனை கூறியிருந்த போதும், பல்வேறு ஆயதப் போர்ச்சூழல்களில் பொதுமக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலைமை, கவனிப்பாக கையாளப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.