திருநெல்வேலி: வி.கே.புரம் காவல் நிலையம் பின்புறம் உள்ள குடியிருப்புப் பகுதியில் ஒற்றை கரடி உலா வந்த சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், பாபநாசம் போன்ற மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், உள்ள குடியிருப்புப் பகுதிகளில் சிறுத்தை, யானை, கரடி, காட்டுப் பன்றிகள் போன்ற வன விலங்குகள் புகுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக, கரடிகள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், அம்பாசமுத்திரம் அருகே வி.கே புரம் காவல் நிலையம் பின்புறம் உள்ள குடியிருப்புப் பகுதியில், நேற்று (மே 18) இரவு கரடி ஒன்று சர்வ சாதரணமாக வந்து சென்றது. இது அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பாதிவாகியுள்ளது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த 5 நாட்களுக்கு முன்னதாக, மயிலாடும்பாறை முருகன் கோயில் வளாகத்திற்குள் கரடி ஒன்று உலா வந்தது. இதனை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டது. ஆனால், கரடி கூண்டிற்குள் சிக்காமல் தற்போது வரை போக்கு காட்டி வருகிறது. கரடிகள் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.