திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் பாபநாசம், மணிமுத்தாறு, கல்லிடைக்குறிச்சி, பொட்டல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கரடி, யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது மலையடிவாரத்தில் உள்ள குடியிருப்பு மற்றும் விளை நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருகிறது.
மேலும் குறிப்பாக கடந்த சில வாரங்களில் கல்லிடைக்குறிச்சி, சிங்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கரடி நடமாட்டம் அதிகமாக இருந்த நிலையில், இன்று கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் இருந்து 80 அடி கால்வாய் அருகே உள்ள தனியார் மாந்தோப்பில் இரை தேடி குட்டியுடன் வந்த கரடி ஒன்று சுற்றி திரிந்தது.
அப்போது அந்த கரடி குட்டி மாந்தோப்பில் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த வேலியில் சிக்கியது. அதனால் கரடி குட்டி பயத்தில் அதிக சத்தம் போடவே அப்பகுதியில் உள்ள விவசாயிகள் இதுகுறித்து அம்பாசமுத்திரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் விரைந்து சென்ற அம்பாசமுத்திரம் வனத்துறையினர் அங்கு வேலியில் சிக்கியிருந்த சுமார் ஒரு வயது பெண் குட்டி கரடியை ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி பத்திரமாக வேலியில் இருந்து விடுவித்தனர். தொடர்ந்து அந்த கரடி குட்டி தாயுடன் சேர்ந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.