ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 1455 சதுர கி.மீ.பரப்பளவு கொண்ட வனப் பகுதியாகும். இந்த புலிகள் காப்பகத்தை சத்தியமங்கலம், ஆசனூர் என கோட்டங்களாக பிரித்து சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமுண்டி, டிஎன்பாளையம், தலமலை, கேர்மாளம், கடம்பூர், தாளவாடி, ஆசனூர் மற்றும் ஜீரஹள்ளி ஆகிய 10 சரகங்களாக அமைக்கப்பட்டன.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இப்பகுதியில், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, மான்கள், செந்நாய்கள், கழுதைப்புலி என பல்வேறு விலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகள் சாலையை கடப்பதை வாகன ஓட்டிகள் தெரிந்துகொள்வதற்காக சாலையின் இருபுறமும் 12 மீட்டர் தூரம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இங்குள்ள பண்ணாரி சோதனைச் சாவடி பகுதியில் சிறுத்தைகள் சாலையை கடந்துச் செல்வது அதிகரித்துள்ளது. இவ்வாறு கடந்துச் செல்லும் சிறுத்தைகள் அவ்வப்போது வாகனங்களின் அடிப்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இந்த நிலையில், பண்ணாரி சோதனைச்சாவடி அருகே இன்று (மே 6) சிறுத்தை ஒன்று சாலையை கடந்துச் சென்றது.
இதனை பார்த்த வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி, சிறுத்தை சாலையை கடந்துச் சென்ற பின்னர் சென்றனர். சிறுத்தை சலையை கடக்கும் காட்சிகளை வாகனத்தில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.