கோயம்புத்தூர்: கருமத்தம்பட்டி நகராட்சிக்குட்பட்ட சோமனூரில் உள்ள பிரபல தனியார் நகைக்கடையில் நேற்று (மே 02) இரவு திடீரென்று புள்ளி மான் ஒன்று அழையா விருந்தாளியாக உள்ளே புகுந்தது. அங்கு வழி தெரியாமல் சுற்றித் திரிந்த மான், பின்னர் அங்கிருந்து வெளியேறி சாலையில் துள்ளி குதித்து ஓடியது.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், தண்ணீர் மற்றும் உணவு தேடி யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
அவ்வாறு விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்கு கிடைக்கும் உணவுகளை சாப்பிடும் மான்கள், நதி படுகையில் உள்ள புதர்களை வாழ்விடமாக்கி அங்கேயே வசித்து வருகின்றன. இதன் காரணமாக கௌசிகா நதி வழித்தடங்களில் மான்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் கோவை கருமத்தம்பட்டி நகராட்சிக்குட்பட்ட சோமனூரில் உள்ள பிரபல தனியார் நகைக்கடையில் நேற்று இரவு திடீரென்று புள்ளி மான் ஒன்று அழையா விருந்தாளியாக உள்ளே புகுந்தது. இதில், கடையின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பதற்றம் அடைந்தனர். கடைக்குள் வழி தெரியாமல் சுற்றித் திரிந்த மான். பின்னர் அங்கிருந்து வெளியேறி சாலையில் துள்ளி குதித்து ஓடி மறைந்தது. இதனை கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் வீடியோ எடுத்தனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.