மூணாறு: கோடை விடுமுறையை முன்னிட்டு கேரளா மாநிலம் மூணாறு இரவிகுளம் தேசிய பூங்காவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை புரிந்துள்ளனர்.
தமிழக - கேரள எல்லையை இணைக்கும், இடுக்கி மாவட்டத்தின் சர்வதேச சுற்றுலா தலமான மூணாறு அருகே அமைந்துள்ளது ராஜமலை. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள ராஜமலை வரையாடுகளின் வாழ்விடமாக உள்ளது. இவை, வரையாடுகளின் பிரசவ காலத்தை கணக்கில் கொண்டு மூடப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோடை விடுமுறையை ஒட்டி, இரவிகுளம் தேசிய பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருகை தந்து விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்து வருகின்றனர். இவற்றில், வரையாடுகளைக் காண ராஜமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், வனச் சாலைகளில் மிக அருகில் உலா வரும் வரையாடுகளை கண்டு ரசித்து, அவற்றுடன் விளையாடி மகிழ்கின்றனர்.
அழிவின் விழிம்பில் உள்ள விலங்கான அரிய வகை "வரையாடுகளை" பாதுகாக்க , இரவிகுளம் தேசிய பூங்காவில் வனத்துறையினர் முழு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.