சாதி வாரி கணக்கெடுப்பை கையில் எடுத்து காங்கிரஸின் அஸ்திரத்தை காலி செய்துள்ளார் பிரதமர் மோடி. இதற்கு பின்னணியில் ராகுல்காந்தியை லாக் செய்வதற்கான பக்கா ஸ்கெட்ச் இருக்கிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அதிரடியான ஒரு அறிவிப்பை வெளியிட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதலும் அளிக்கப்பட்டது. கடந்த காலங்களில் சாதி வாரி கணக்கெடுப்பிற்கு பாஜகவிடம் இருந்து ரெட் சிக்னலே வந்து கொண்டிருக்கிறது. யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜகவின் முக்கிய புள்ளிகளும் அதற்கு எதிராகவே கருத்து தெரிவித்து வந்தனர்.
இப்படி இருந்த பாஜக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு நாங்கள் கொடுத்த அழுத்தம் தான் காரணம் என காலர் தூக்கி வருகின்றனர் எதிர்க்கட்சியினர். ஆனால் காங்கிரஸுக்கு செக் வைக்கும் விதமாக சாதிவாரி கணக்கெடுப்பை பாஜக கையில் எடுத்துள்ளதாக சொல்கின்றனர். மக்களவை தேர்தலில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய பிரச்சாரம் காங்கிரஸுக்கு கைகொடுத்தது. அதன்பிறகும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்.
இதுதொடர்பாக பேசிய ராகுல்காந்தி, நாட்டின் பெரும்பாலான OBC பிரிவினருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. பட்ஜெட் நிதியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற அதிகாரமே ஆதிக்க சாதிகளிடம் தான் உள்ளது. நாட்டின் பெரும்பான்மையாக உள்ள ஒபிசி பிரிவினர் ஆட்சி அதிகாரத்தில் புறக்கணிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை கோடி பேர் இருக்கின்றனர் என்பதை சாதிவாரி கணக்கெடுப்பு மூலமே உறுதி செய்ய முடியும்” என்று சொல்லி வருகிறார்.
சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் ராகுல்காந்திக்கும், காங்கிரஸுக்கும் ப்ளஸாக மாறியுள்ள நேரத்தில், அதற்கு செக் வைத்துள்ளார் பிரதமர் மோடி. அதுவும் பீகார் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேர்தல் களத்தில் இது காங்கிரஸுக்கு அடியாக இருக்கும் என சொல்கின்றனர். அதுவும் மக்களவை தேர்தலில் பீகார், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் OBC வாக்குகள் பாஜகவுக்கு குறைந்ததால் தான் மாநில கட்சிகளுடன் போட்டி போட்டு சறுக்கியதாக பேச்சு அடிபட்டது.
அந்த வாக்குகளையும் பாஜக கொண்டு பக்கம் கொண்டு வருவதற்காக பிரதமர் மோடி கணக்கு போட்டு காய் நகர்த்தியுள்ளதாக தெரிகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை ராகுல்காந்தி அஸ்திரமாக பயன்படுத்தி வந்த நேரத்தில், பாஜக தற்போது அதனை கையில் எடுத்து காங்கிரஸ் தலைமைக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துள்ளதாக சொல்கின்றனர்.