வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் குறிச்சியாடு வனப்பகுதியில் வெள்ளை மான் சுற்றித் திரிந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தூய்மையை குறிக்கும் வெள்ளை நிறம் அனைவருக்கும் பிடித்த நிறமாகும். இந்த வெள்ளை நிறத்தில் சில விலங்குகள் மற்றும் பறவைகள் காணப்படுவது வழக்கம். குறிப்பாக வெள்ளை நிற காகம், மயில், பாம்பு, புலி போன்றவை இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், தற்போது வெள்ளை நிற மான் ஒன்று வனப் பகுதியில் சுற்றித் திரியும் காட்சிகள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு குறிச்சியாடு வனப்பகுதியில் வெள்ளை உருவத்தோடு ஆடு போன்று தென்பட்ட மான், வனப் பகுதியில் சுற்றி திரிந்தது. இதனை அவ்வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வனப் பகுதிகளில் புள்ளிமான், கடமான் உள்ளிட்ட ஏராளமான மான் வகைகள் உள்ளன. ஆனால், குறிச்சியாடி வனப்பகுதியில் முதன்முறையாக தென்பட்ட இந்த வெள்ளை நிற மான், வனத்துறையினர் மட்டுமின்றி பொதுமக்களிடேயும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.