கோயம்புத்தூர்: குரும்பபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் அக் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் இன்று (ஏப்ரல் 26) நடைபெற்றது.
இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக தவெக தலைவர் விஜய் இன்று சென்னையிலிருந்து கோவை வந்தடைந்தார். அவரது வருகையை முன்னிட்டு ஏராளமான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர்.
எஸ்.என்.எஸ். பொறியியல் கல்லூரியில் நடைபெறும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் விஜய் பங்கேற்றார். முன்னதாக இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஏராளமான தொண்டர்கள் கல்லூரி வளாகத்திற்கு வருகை புரிந்துள்ளனர். இதில், கூட்டத்தை கட்டுப்படுத்த தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் முயற்சி செய்தார்.
அப்போது இரும்பு தடுப்புகளை தொண்டர்கள் ஆட்டியதால் புஸ்ஸி ஆனந்த் காலில் காயம் ஏற்பட்டது. இதில், அவரது ஆடை (பேண்ட்) கிழிந்து ரத்தம் வந்தது. இதனையடுத்து தொண்டர்கள் அவரது காலில் கைக்குட்டையால் கட்டி அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, ஆம்புலன்சில் முதல் உதவி சிகிச்சைப் பெற்று பின்னர் அவர் கூட்டத்தில் கலந்து கொண்டார்.