¡Sorpréndeme!

நாகப்பட்டினம் செல்லமுத்து மாரியம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா!

2025-04-21 2 Dailymotion

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் தேவூர் அருகே செல்லமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரைப் பெருவிழா இன்று முதல் 24 நாட்கள் நடைபெற உள்ளது. சித்திரை பெருவிழாவின் தொடக்க நிகழ்வான அம்பாளுக்குப் பூச்சொரிதல் நிகழ்ச்சி இன்று (ஏப்.21) நடைபெற்றது. 

இந்நிகழ்வில் தேவபுரிஸ்வரர் ஆலய குளக்கரையிலிருந்து அம்பாளுக்கு மங்கள இசை வாத்தியங்கள் முழங்க 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக பூத்தட்டுகளை ஏந்தி வந்தனர். தொடர்ந்து செல்லமுத்து மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மலர்களால் அபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து, அம்பாளுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, பக்தர்கள் பூக்குழி இறங்குவதற்காகக் காப்புக்கட்டிக் கொண்டனர். தொடர்ந்து, இரவு அம்பாள் வீதி உலா காட்சி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா வருகிற ஏப்.28ம் தேதி நடைபெற உள்ளது.