கடவுளின் தேசம் இன்று தண்ணீரிலும் கண்ணீரிலும் மிதந்துகொண்டிருக்கிறது. மழையும், வெள்ளமும் கேரளத்தின் இயல்பையே மாற்றியிருக்கிறது. இதுவரை 324க்கும் அதிகமானோர் இறந்திருப்பதாக கேரள அரசு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. ``ரெட் அலர்ட்'' பகுதியாகக் கேரளா அறிவிக்கப்பட்டிருக்கிறது.கிட்டத்தட்ட ஒன்றரை லட்ச மக்கள் 1200 க்கும் அதிகமான பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளைக் கேரள அரசு செய்து கொடுக்கிறது. வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியில் 12 தேசியப் பேரிடர் மேலாண்மை குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.