*** மூன்றில் ஒரு பங்குதான் கொடுத்தார்கள்!" - முடிவுக்கு வராத கூவத்தூர் கணக்கு***
அ.தி.மு.க அரசியல் வரலாற்றில் கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டை அவ்வளவு எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் வரிந்து கட்டிக் கிளம்பிய மறுநாளே எம்.எல்.ஏக்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் சசிகலா. 11 நாட்களாக தொடர்ந்து பிரேக்கிங் செய்திகளில் இடம் பிடித்தது கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட். "எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றனர். பன்னீர்செல்வம் அணியின் பக்கம் 12 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். 'அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்' என அறிவித்தார் அ.தி.மு.க சட்டமன்ற கொறடா ராஜேந்திரன். இதைப் பன்னீர்செல்வம் அணியினர் ஏற்கவில்லை. பெருத்த ரகளைக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த தீர்மானம் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பின்னால் கவர்ச்சிகரமான பல வாக்குறுதிகள் உள்ளன" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்,
"அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காலத்திலேயே, தனக்கான ஆதரவு எம்.எல்.ஏக்களை உருவாக்கி வைத்திருந்தார் பன்னீர்செல்வம். அந்தநேரத்தில் சீனியர் அமைச்சர்கள் பன்னீர்செல்வத்துக்கு உரிய மரியாதையைக் கொடுக்கவில்லை. இதை அறிந்த எம்.எல்.ஏக்களில் பெரும் பகுதியினர், 'பன்னீர்செல்வத்தோடு இருந்தால் அமைச்சர் பதவி வந்து சேரும்' என்ற கனவில் இருந்தனர். ஜெயலலிதா சமாதியில் அவர் அமர்ந்ததும், எம்.எல்.ஏக்களை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார் சசிகலா. தினகரன் ஆலோசனையின்பேரில், 90 சதவீத எம்.எல்.ஏக்கள் கோல்டன் பே ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.