தண்டையார்பேட்டையில் குடி போதையில் 3வது மாடியில் இருந்து கீழே விழுந்த நபர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுமி மீது விழுந்ததால் அவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார். உயிருக்கு போராடும் அந்த சிறுமியின் பெயர் தன்யாஸ்ரீ என்பதாகும். தண்டையார் பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீதர், தேவி என்பவரின் மகளாவார். 4வயதாகும் அந்த சிறுமி கடந்த ஞாயிறன்று தனது தாத்தா அருணகிரியுடன் இரவு 8 மணிக்கு அருகில் இருந்த கடைக்கு மிட்டாய் வாங்க சென்றார்.
அப்போது, ஒரு வீட்டின் 3வது மாடியில் இருந்து ஒருவர் திடீரென கீழே விழுந்தார். அப்போது தன்யஸ்ரீயின் மீது விழவே சிறுமி படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக தண்டையார்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தன்யஸ்ரீக்கு காயம் அதிகமாக இருந்ததால் அங்கிருந்து அவர் க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.சிறுமி தன்யஸ்ரீ மூளையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.
சிறுமியின் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கால் எலும்பும் முறிந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிசிக்சை பெற்று வருகிறார். குழந்தை மீண்டு வந்து விடுவாள் என்று நம்பிக்கையுடன் பிராத்தனை செய்து வருகின்றனர் சிறுமியின் பெற்றோர். கண்ணீர் மல்க தங்களின் மற்றொரு குழந்தையை கையில் பிடித்தபடி காத்திருக்கின்றனர்.
தன்யஸ்ரீயின் தந்தை பெயர் சி. ஸ்ரீதர். செல்போன் எண் 7092380119. உயிருக்கு போராடும் சிறுமிக்கு உயரிய சிகிச்சை தேவைப்படுகிறது. சிறுமியின் உயிர் காக்க உதவி செய்ய விரும்புவர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.