போக்குவரத்துத்துறை என்பது மக்களுக்கு சேவை செய்யும் ஒரு துறை அதனால், அந்தத்துறையின் இழப்புகளை மக்கள் மீது அரசு திணிக்கக்கூடாது என்று முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசுப்பேருந்துகளில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணங்களை குறைக்கக் கோரி மாநிலம் முழுவதும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் நடக்கும் இந்த போராட்டத்தில் திமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்திற்கு பொதுமக்களும் அதிக அளவில் ஆதரவு வழங்கினர். போரட்டத்தில் ஈடுபட்டவர்களை பல இடங்களில் காவல்துறை கைது செய்துள்ளது. திருச்சியிலும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தை திமுகவின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதால் அதை சமாளிக்கவே கட்டண உயர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று முதல்வரும், அமைச்சர்களும் கொடுக்கும் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் நல்வாழ்விற்காக வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும்போது, அரசுக்கு கடன் சுமை அதிகரிக்கத்தான் செய்யும். ஆனால், வளர்ச்சித் திட்டங்கள் மக்களுக்கு நீண்ட நாள் பலனை அளிக்கக்கூடியது. அதனால் அதை எந்த விதத்திலும் அரசு கட்டுப்படுத்தக்கூடாது. ஒவ்வோர் ஆண்டும் புதிதாக தொழிலாளர்கள் பணியில் சேர்கிறார்கள், பலர் பணி ஓய்வு பெறுகிறார்கள், போக்குவரத்து துறை செலவினங்கள் அதிகரிக்கின்றன இவை எல்லா காலத்திலும் பொதுவான ஒன்று. கழக ஆட்சிக்காலத்தில் இது போன்று பல பிரச்னைகள் வந்தாலும், அதை நாங்கள் பொதுமக்கள் மீது திணிக்கவில்லை. தற்போது போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள இழப்பை அரசு தான் கொடுக்க வேண்டும். போக்குவரத்துத்துறை என்பது சேவை மனப்பான்மையோடு இயங்க வேண்டும். லாப நோக்கம் பார்த்து மக்கள் மீது கட்டண உயர்வை திணிக்கக்கூடாது என்று நேரு குறிப்பிட்டு உள்ளார்.