சென்னை சேப்பாக்கத்தில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற எருமைமாடுகள் மீது ரயில் மோதியதில் இரு மாடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தது. மேலும் 4 எருமைகள் ஆபத்தான நிலையில் உள்ளன.
சேப்பாக்கம் - சிந்தாதிரிப்பேட்டை இடையே பகல் 12.30 மணியளவில் கூட்டமாக வந்த எருமை மாடுகள் தண்டவாளத்தைக் கடக்க முயன்றன. அப்போது அந்த வழியாக வந்த பறக்கும் ரயில் அவற்றின் மீது மோதியது. இதில் இரண்டு மாடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தது. மேலும் 4 எருமைகள் ஆபத்தான நிலையில் உள்ளன.
ப்ளூ கிராஸ் எனப்படும் அமைப்புக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். ஆனால், அடிபட்ட மாடுகளை அங்கிருந்து அப்புறப்படுத்துவதில் சிக்கல் நிலவுகிறது. மேலும், தண்டவாளத்துக்கும் தடுப்புச் சுவருக்கும் இடையே மிகக் குறுகிய இடைவெளியே இருப்பதால் அங்கேயே அவற்றிற்கு முதலுதவி அளிப்பதிலும் சிக்கல் நிலவுகிறது.
வேதனையில் அந்த எருமை மாடுகள் அலறுவது காண்போரை உருகச்செய்தது.