அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 500 ஏக்கரில் பிரம்மாண்ட புதிய அலுவலகம் கட்டும் பணியில் இறங்கி இருக்கிறது. இதற்காக வாஷிங்டனில் இப்போதே வேலைகளை தொடங்கிவிட்டது. இந்த கட்டிடம் முழுக்க முழுக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெல்லா விருப்பத்தின்படி வடிவமைக்கப்பட இருக்கிறது. மேலும் அவருக்கு பிடித்த சில முக்கியமான விஷயங்கள் அங்கு இடம்பெற உள்ளது. இந்த கட்டிடம் குறித்து ஆச்சர்யம் அளிக்க கூடிய தகவல்கள் நிறைய வெளியாகி உள்ளது. முக்கியமாக இதில் கிரிக்கெட் மைதானம் ஒன்று அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
வாஷிங்டனில் இருக்கும் 'ரெட்மோண்ட்' என்ற பகுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய அலுவலகத்தை கட்ட இருக்கிறது. இந்த அலுவலகம் மொத்தம் 500 ஏக்கரில் இருக்கும். இதில் மொத்தம் 18 கட்டிடங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. 2018 இறுதிக்குள் இதன் கட்டுமான பணி முடிவடையும். இந்த கட்டிடம் எப்படி இருக்கும் என்று இந்த நிறுவனம் யூ டியூபில் வீடியோ வெளியிட்டு இருக்கிறது.
இந்த கட்டிடம் 500 ஏக்கரில் கட்டப்படுவதால் இதில் நிறைய வசதிகள் செய்யப்பட இருக்கிறது. மிகப்பெரிய அளவில் 2000 க்கும் அதிகமான நபர்கள் உட்கார்ந்தது பார்க்கும் வகையில் திறந்த வெளி தியேட்டர் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் சாப்பிடுவதற்கு மட்டுமே 8 அடுக்கு மாடிக்கட்டிடம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. மேலும் கார் பார்க்கிங், விளையாட்டு தளம் என நிறைய புதிய வசதிகளும் இடம்பெறவுள்ளது.